கொரியாவின் கலாச்சாரம் மற்றும் மொழியானது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் மொழியை சார்ந்து விளங்குகிறது, கடந்த இருபது வருடங்களாக , தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் பல்வேறு நோக்கங்களுக்காக தென் கொரியாவுக்கு வருகை தருகின்றனர். அறிவியல் மற்றும் பொறியியல் வேலைகள் மற்றும் உயர் கல்வி ஆகியவை தமிழ் மக்களில் பெரும்பாலோர் ஈடுபட்டுள்ள முக்கியமான துறைகளாகும். கொரியாவில் வாழும் தமிழ் மக்கள் எண்ணிக்கை அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா (முக்கியமாக தென்னாப்பிரிக்கா), சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையயை விட மிகவும் குறைவானதாகும்.

இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினையின் காரணமாக இலங்கையின் வடகிழக்கு பகுதிகளிலிருந்து பல்வேறு தமிழ் மக்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தனர். கடந்த பத்து வருடங்களாக, தனிநபர் தொடர்புகள், மின்னஞ்சல் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் கொரியாவில் வாழும் தமிழ் சமூகத்தை ஒழுங்கமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களுக்காக ஒன்றுபட்ட ஒரு அமைப்பின் அவசியத்தை உணர்ந்த நாங்கள் கொரியாவில் தமிழ் சங்கத்தை ஒழுங்கமைக்க முயற்ச்சித்து , இந்த அமைப்பிற்கு கொரிய தமிழ் சங்கம் (கே.டி.எஸ்) என்று பெயரிட்டு உள்ளோம், ஏனெனில் சங்கம் என்ற வரலாற்றுத் தமிழ் சொல் பயன்படுத்தப்படும் அமைப்புகளின் முதன்மைப்பணி, தமிழ் மொழி மற்றும் சமூக நலன்சார்ந்த சேவை செய்வதுமே, இதுவே எங்களின் குறிக்கோளும் ஆகும். கொரிய தமிழ் சங்கமானது தென் கொரியாவின் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகவும் மேலும் இந்த அமைப்பில் ஆர்வமுள்ள கொரிய மக்களுடன் இணைந்து வலுவான உறவை வளர்த்துக் கொள்ள உதவும் ஒரு தளமாகவும் இருக்கிறது.

இந்த அமைப்பின் நோக்கம் தமிழ் மற்றும் கொரியர்களிடையே சமூக, கலாச்சார, இலக்கிய, தொண்டு மற்றும் கல்வி நடவடிக்கைகள் மூலம் தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பது. மேலும், தென் கொரியாவில் வாழும் தமிழ் மக்களை ஆக்கபூர்வமான முறையில் ஒருங்கிணைத்து பயனுள்ள தகவல்களைத் தெரிவிக்கக்கூடிய கூட்டங்களை நடத்துவதும், பெண்களை ஊக்குவிப்பதும், இங்குவாழும் தமிழர்களிடையே நல்ல இணக்கமான உறவை மேம்படுத்துவதுமாகும். மேலும் கொரிய தமிழ் சங்கமானது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை கொரிய மக்களுக்கு பிரதிபலிக்கவும், தமிழ் மற்றும் கொரிய மக்களிடையே பரஸ்பர கூட்டுறவை மேம்படுத்தவும், தமிழ் என்ற ஒற்றை அடையாளத்தை மட்டுமே முதன்மையாக நிறுத்தி இங்குள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் சமமான முறையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற விரும்புகிறது.

T

Useful Links

கொரிய தமிழ்ச் சங்கம்
© 2019 ~ 2020 koreatamilsangam.com
All Rights Reserved Terms of Use and Privacy Policy